மதுரை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் வினாத்தாள் கட்டண நடைமுறையை ரத்து செய்து, அதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே வலுத்துள்ளது.
தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பள்ளிப் பைகள் உள்ளிட்ட 21 வகையான நலத்திட்டங்களை இலவசமாக வழங்கி வருகிறது. மேலும், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் பெற்றோர்-ஆசிரியர் இணைப்புக் கட்டணமான ரூ.50 தவிர வேறு எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவும் நடைமுறையில் உள்ளது.
ஆனால், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் ரூ.80, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.100, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடம் ரூ.150 வரை வினாத்தாள் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சில மாவட்டங்களில் இந்தத் தொகை ரூ.10 முதல் ரூ.20 வரை மாறுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணம் காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்காக வசூலிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டாலும், ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய் இந்த வழியில் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், வினாத்தாள் அச்சிடும் பணிகளைப் பெறும் தனியார் நிறுவனங்களிடமிருந்து சில அதிகாரிகள் மற்றும் வினாத்தாள் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கமிஷன் வழங்கப்படுவதாகவும், இதனால் இந்த நடைமுறை முறைகேடாக மாறியுள்ளதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.
கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களிடம் கூட பின்னர் வசூலிக்கும் வகையில் ஆசிரியர்கள் முதலில் தொகையை செலுத்த வேண்டிய சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் கூடுதல் சுமையை எதிர்கொள்வதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், தொடக்கக் கல்வி மாணவர்களுக்கான வினாத்தாள் செலவை அரசே ஏற்றுக்கொள்வதைப் போல, 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் இந்தச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும், மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு தமிழக முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
