வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இது தன்னுடைய 10வது முயற்சியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்கா மத்தியஸ்தமாக இருந்து இரு நாடுகளையும் நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதன்படி, மார்கோ ரூபியோ தலைமையில் வாஷிங்டனில் இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதர்கள் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
1993க்கு பின் முதன்முறையாக இரு நாடுகளும் நேரடியாக பேச்சு நடத்தி, பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டன. அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடந்த இந்த சந்திப்பில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லெபனான் அதிபர் ஜோசப் ஆவோன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் தாம் நடத்திய உரையாடலின் பின்னர், 10 நாள் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்த போர் நிறுத்தம் அறிவிப்புக்கு 6 மணி நேரத்திற்குப் பிறகு அமலுக்கு வரும் என்றும் கூறினார். உலகளவில் பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், இது தனது 10வது சாதனை என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகளில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ராணுவ அதிகாரிகள் இணைந்து செயல்பட உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
