மின் கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது தவறான தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பரவிய தகவலை அடிப்படையாகக் கொண்டு ஸ்டாலின் மக்களை குழப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மின் கட்டணம் தொடர்பாக வெளியாகும் புகார்கள் குறித்து வழக்கமான ஆய்வுகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 11 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மூன்று மடங்குக்கும் அதிகமாக மின் கட்டணம் வந்திருந்ததாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 9 லட்சத்து 60 ஆயிரமாக குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் கடந்த ஆண்டை விட சுமார் 2 லட்சம் பேருக்கு குறைவாகவே அதிக கட்டணப் பதிவுகள் இருப்பதாக கூறினார்.
மின் கட்டணம் செலுத்துவதற்கான கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்றும், 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக கூறப்படும் தகவல் உண்மையல்ல என்றும் அமைச்சர் நிர்மல்குமார் மறுத்தார். வாட்ஸ்ஆப்பில் பரவும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களை குழப்பக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், காவிரி நீர் விவகாரம் குறித்து அரசு தெளிவான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும், நிலைமையை ஆய்வு செய்த பிறகு முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
