அறந்தாங்கி: “நாளை மாலை 4 மணிக்கு பார்லிமென்டில் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு, 4.05 மணிக்கு இந்த சட்டத்தை யார் நினைத்தாலும் நிறுத்த முடியாது” என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அறந்தாங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்த்து வருவதாக விமர்சித்தார்.
இந்த சட்டத்திருத்தம் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதாகும்; இதில் யாருக்கும் எதிர்ப்பு இருக்கக் கூடாது என்றும், தற்போதுள்ள எம்.பி. இடங்கள் குறைக்கப்படாமல் அதிகரிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் தற்போது 39 எம்.பி. இடங்கள் உள்ள நிலையில், இந்த சட்டத்திருத்தத்திற்குப் பிறகு அது 59 ஆக உயருகிறது எனவும், கேரளாவில் 20 இடங்கள் 30 ஆகவும், கர்நாடகாவில் 28 இடங்கள் 42 ஆகவும், தெலுங்கானாவில் 17 இடங்கள் 26 ஆகவும், ஆந்திராவில் 25 இடங்கள் 38 ஆகவும் உயர்த்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மொத்தமாக தென்னிந்திய மாநிலங்களுக்கெல்லாம் சுமார் 50% அளவில் எம்.பி. இடங்கள் அதிகரிக்கப்படுகின்றன என்றும், இதனால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், தற்போது தென்னிந்திய மாநிலங்களின் எம்.பி. பிரதிநிதித்துவம் 23.9% உள்ள நிலையில், இது 29.9% ஆக உயரவுள்ளதாகவும் தெரிவித்தார். பார்லிமென்டில் பெண்கள் அதிக அளவில் வர வேண்டும் என்பதே நரேந்திர மோடி அவர்களின் நோக்கம் எனவும் கூறினார்.
பெண்கள் சட்டமன்றம் மற்றும் பார்லிமென்டுக்கு செல்ல வழிவகுக்கும் இந்த சட்டத்தையும் சிலர் எதிர்த்து வருகின்றனர் என்றும், அவர்கள் காரணமே தெரியாமல் எதிர்ப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், மக்கள் தொகை அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படவில்லை என்றும், அப்படி செய்திருந்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும், அதனை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
