அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஸோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது சுமார் 50 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று வருவதாகவும், இருப்பினும் அரசுப் பள்ளிகளின் தரம் குறித்த கவலை காரணமாக அந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள்கூட கடன் வாங்கி தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நீண்டகாலமாக முறைகேடுகள் நடைபெறுவதாகவும், நியமனத்திற்காக ஒரு ஆண்டு சம்பளத்துக்கு இணையான தொகை முன்பணமாக வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் அரசு உதவி பெறும் பள்ளியில் கல்வி பயின்றதாக நினைவுகூர்ந்த ஸ்ரீதர் வேம்பு, அரசுப் பள்ளி கல்வி அமைப்பை மேலும் வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றார். தங்களது இலவசப் பள்ளியை விரிவுபடுத்தி வருவதாக தெரிவித்த அவர், அதைவிட அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதே முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசுப் பள்ளிகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் இருப்பதாகக் கூறிய அவர், அவர்களுக்கு உரிய ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர் நியமன நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சில அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் திருப்திகரமாக இருந்தாலும், சில இடங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், முதலில் ஆசிரியர் நியமன முறையை சீர்திருத்தி, அதன் பின்னர் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
