தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்காக 60,000 புதிய டயர்கள் வாங்குவதற்காக வெளியிடப்பட்டிருந்த டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 500 புதிய பேருந்துகள் மற்றும் மாநகர போக்குவரத்து கழகத்திற்காக 300 ஏசி மினி பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக தற்போது டயர் கொள்முதல் டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் தினமும் 20,508 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு தேவையான டயர்கள், கியர்பாக்ஸ் உள்ளிட்ட உதிரிபாகங்கள் வழக்கமாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கொள்முதல் செய்யப்படுகின்றன. இதில் மாதந்தோறும் சுமார் 8,000 டயர்கள் தேவைப்படுவதால், கடந்த மார்ச் மாதத்தில் 60,000 டயர்கள் வாங்க டெண்டர் வெளியிடப்பட்டது.
ஆனால், அந்த டெண்டர் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தற்போது பேருந்துகளை சீராக இயக்க போதுமான அளவில் டயர்கள் இருப்பில் உள்ளதாக தெரிவித்தனர். மேலும், அடுத்த ஒரு அல்லது இரண்டு மாதங்களுக்குள் மேம்பட்ட தரம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட டயர்களை வாங்க புதிய டெண்டர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளக்கமளித்தனர்.
