நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் லோக்சபா மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை சுமார் 50 சதவீதம் அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு வழிமுறைகளை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், மகளிருக்கு லோக்சபா மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதாவுடன், லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 ஆக உயர்த்தும் திட்டமும் முன்வைக்கப்பட்டது.
எனினும், இந்த மசோதா தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கக்கூடும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் நிறைவேறவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அரசியல் சூழல் மாறியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநிலத்திலும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மக்கள் தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்ற அச்சத்தை கருத்தில் கொண்டு, 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய விகிதாசாரத்தை மாற்றாமல் தொடர்வதும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தற்போது நடைபெற்று வரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறைவடையாத நிலையில், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் லோக்சபா மற்றும் சட்டப்பேரவை தொகுதிகள் குறித்து முடிவு எடுக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த மசோதாவுக்கு தேவையான அரசியல் ஆதரவு கிடைத்த பிறகே, அதை நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
