ரயிலில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம், சிறைத் தண்டனை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
சென்னை: ரயில் பயணத்தின்போது ஹெட்போன் பயன்படுத்தாமல், மொபைல் போனில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு சக பயணிகளுக்குத் தொந்தரவு அளித்தால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறுகையில், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சில பயணிகள் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, ரீல்ஸ் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பது, மொபைல் கேம்களை விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகப் பலர் புகார் தெரிவித்துள்ளனர் என்றார்.
இந்த நிலையில், ஜன விஷ்வாஸ் சட்டம் மற்றும் திருத்தப்பட்ட ரயில்வே சட்டப் பிரிவுகளின் கீழ், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் அதிக சத்தத்துடன் மொபைல் போனில் பாடல்கள் கேட்பது அல்லது வீடியோக்களைப் பார்ப்பது போன்ற செயல்களால் சக பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்படுத்தினால், ரூ.1,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத்தை டிக்கெட் பரிசோதகர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரம் கொண்ட வணிகப்பிரிவு அலுவலர்கள் வசூலிக்கலாம் என்றும், எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து தொந்தரவு அளிப்பவர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
