பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியாருக்கு தூக்கு தண்டனை: வழக்கறிஞர் நியமனம் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் ஆபிரகாம், மேல்முறையீடு செய்வதற்காக வழக்கறிஞரை நியமித்துள்ளாரா என்பது குறித்து சிறை ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தகுளத்தைச் சேர்ந்த 47 வயதான ஆபிரகாம், மதபோதகராகப் பல்வேறு மாவட்டங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று மதப்பணிகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு மதப்பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட நான்கு சிறுமிகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தேவர்குளம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும் தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
கீழமை நீதிமன்றம் விதிக்கும் தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டிய நடைமுறையின்படி, இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அனுப்பப்பட்டது. நீதிபதிகள் எம். நிர்மல்குமார், என். குணசேகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது, திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ள ஆபிரகாம் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளாரா என்றும், அவரது தரப்பில் ஆஜராக வழக்கறிஞரை நியமித்துள்ளாரா அல்லது இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த ஆபிரகாம், ஒரு வழக்கறிஞர் ஆஜராவதாகக் கூறி தன்னிடம் வக்காலத்தில் கையெழுத்து பெற்றுச் சென்றதாகத் தெரிவித்தார். மேலும், தன்னை போலீசார் கைது செய்யவில்லை என்றும், தனிப்படை போலீசார் கைது செய்து தென்னந்தோப்பில் இரண்டு நாட்கள் வைத்திருந்து தாக்கியதாகவும் அவர் கூறினார். மேல்முறையீட்டு மனுவில் தனது தரப்பு கருத்துகளைத் தெரிவிக்கலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இறுதியாக, ஆபிரகாமுக்கு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த சிறையில் உள்ள ஆவணப் பதிவுகளை ஆய்வு செய்து, சிறைத்துறை நிர்வாகம் அக்டோபர் 16-ஆம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
