தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் பராமரிப்பு குறித்து கவலை தெரிவித்து, ஆகஸ்ட் மாதம் முழுவதும் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுமாறு ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் உறுப்பினர்களுக்கு அதன் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், இந்தியாவிலேயே நகர்ப்புற மக்கள் அதிகமாக வாழும் மாநிலம் தமிழகம் என குறிப்பிட்டார். 1970 முதல் 2015 வரை உலக வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்த நிலையில், அதன்பிறகான 10 ஆண்டுகளில் மட்டும் 0.35 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னையில் 67 சதவீத நிலப்பரப்பு கட்டிடங்களாக மாறிவிட்டதாகவும், வெறும் 10 சதவீதம் மட்டுமே பசுமைப் பரப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார். இதனால், ஏர் கண்டிஷனர் இல்லாமல் வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் 1.06 லட்சம் நீர்நிலைகளில் 50,197 நீர்நிலைகள் தற்போது காணப்படவில்லை என்றும், ஆறுகள் மாசடைந்து வருவதுடன் காடுகளின் பரப்பளவும் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
தென் மாநிலங்களில் நிலத்தடி நீரை அதிக அளவில் பயன்படுத்தும் மாநிலம் தமிழகம் என்றும், தற்போதைய நிலை தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டில் கோவை மற்றும் கன்னியாகுமரியைத் தவிர மற்ற மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை கடுமையாக இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதையடுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
