திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட போக்சோ வழக்கில், கிறிஸ்தவ பாதிரியார் ஆபிரகாம், 47, என்பவருக்கு தூக்குத் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மதபோதகராக பணியாற்றி வந்துள்ளார். பல்வேறு மாவட்டங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று மதப்பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு மதப்பணி தொடர்பாக அழைத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12, 13 மற்றும் 8 வயதுடைய சிறுமிகள் உள்ளிட்ட நான்கு சிறுமிகளுக்கு ஆபிரகாம் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சிறுமிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அவர்களின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஊரக அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆபிரகாமை கைது செய்தனர்.
மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில், கூடுதல் எஸ்.பி. சண்முகம் தலைமையிலான போலீசார் வழக்கை தீவிரமாக விசாரித்தனர். விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஆபிரகாம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை போக்சோ வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
