சென்னை: எதிர்காலத்தில் சென்னை ஐஐடி பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுடன் மட்டும் நின்றுவிடாமல், மருத்துவத் துறையிலும் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி படிப்புகளை வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
எதிர்கால தலைமுறை மாணவர்கள் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக உருவாக வேண்டும் என்பதே ஐஐடியின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐஐடி கரக்பூர் ஏற்கனவே சொந்தமாக மருத்துவமனை அமைத்து எம்டி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை வழங்கி வரும் நிலையில், சென்னை ஐஐடியும் படிப்படியாக மருத்துவமனை அமைத்து, தேவையான அனுமதிகளைப் பெற்று மருத்துவப் படிப்புகளை தொடங்கும் என காமகோடி தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பட்டங்களை வழங்குவது சென்னை ஐஐடியை மேலும் விரிவான கல்வி நிறுவனமாக மாற்றும் என்றும் அவர் கூறினார்.
மருத்துவம் – தொழில்நுட்பம் இணைப்பு
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மருத்துவப் பள்ளிகளைத் தொடங்குவது அவசியம் என காமகோடி தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளின் அறிவை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியாவில் உள்நாட்டு மருத்துவத் தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா தற்போது உயர்தர மருத்துவ உபகரணங்களில் கணிசமான பகுதியை இறக்குமதி செய்து வருகிறது. உள்நாட்டிலேயே மருத்துவத் தொழில்நுட்ப சாதனங்களை வடிவமைத்து தயாரிக்க வேண்டுமானால், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒரே சூழலில் இணைந்து செயல்படும் வகையில் பயிற்சி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான நடைமுறை
இந்தியாவில் மருத்துவக் கல்வி தேசிய மருத்துவ ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவக் கல்லூரி நடத்துவதற்கும் எம்பிபிஎஸ் பட்டம் வழங்குவதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி அவசியம்.
மேலும், மருத்துவ மாணவர்கள் நேரடியாக நோயாளிகளுடன் பணியாற்றி பயிற்சி பெறுவதற்கு தேவையான மருத்துவமனை வசதியும் இருக்க வேண்டும். எனவே, சென்னை ஐஐடி மருத்துவப் படிப்புகளை தொடங்க வேண்டுமானால், தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்கி, உரிய அனுமதிகளைப் பெற வேண்டும்.
ஐஐடி கரக்பூர் ஏற்கனவே சொந்த மருத்துவமனையை அமைத்து, மருத்துவர்களுக்கான முதுகலை எம்டி படிப்புகளை தொடங்க அனுமதி பெற்றுள்ளது. அதே நேரத்தில், அதன் எம்பிபிஎஸ் படிப்பு இன்னும் உள்கட்டமைப்பு பணிகள் காரணமாக தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை ஐஐடியும் எதிர்காலத்தில் மருத்துவப் படிப்புகளை தொடங்கும் திட்டத்தை கொண்டுள்ளதாக இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
