சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும் என முதல்வர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை கோவளத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் விஜய், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகள் சட்டப்பூர்வமாகவும், பரஸ்பர ஒத்துழைப்புடனும் நிர்வகிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
காவிரி நீரை உரிய அளவில் பங்கிடாமல் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை உறுதி செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை, விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு நீர் முக்கியமானது என்பதால், நதிநீர் விவகாரங்களில் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.
போதைப்பொருள் தடுப்பு
மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என முதல்வர் விஜய் தெரிவித்தார். மாநிலங்கள் இணைந்து செயல்படுவதுடன், உளவுத்தகவல்களை பரிமாறிக் கொள்வது போதைப்பொருள் ஒழிப்பில் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் கூறினார்.
கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மீன்பிடி தொடர்பான விவகாரங்களில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்பட தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
கல்வி மற்றும் நீட்
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அடிப்படையில் நடைபெற அனுமதிக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தினார்.
நீட் நுழைவுத் தேர்வு காரணமாக கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளில் சமத்துவம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலங்களின் நிதி உரிமை
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பெட்ரோல் மற்றும் மதுபானங்களைத் தவிர பல்வேறு துறைகளில் மாநிலங்களுக்கு தங்களது வருவாய் ஆதாரங்களை மாற்றியமைக்கும் சுதந்திரம் குறைந்துள்ளதாக முதல்வர் விஜய் குறிப்பிட்டார்.
எனவே, வரி விகிதங்களை நிர்ணயிப்பதில் மாநிலங்களுக்கான உரிமையை மீண்டும் உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மாநிலங்களின் நிதி தன்னாட்சி மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மெட்ரோ மற்றும் மக்களவை பிரதிநிதித்துவம்
கர்நாடகாவின் பொம்மசந்திரா முதல் தமிழகத்தின் ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார்.
தொகுதி மறுவரையறை காரணமாக மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாத வகையில் சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
