“இந்திய இளைஞர்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவது அவசியம்”: பிரதமர் மோடி
ஆமதாபாத்: இந்திய இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவது மிகவும் அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.35,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், சில திட்டங்களை தொடங்கியும் வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
“இந்தியா உற்பத்தியில் புதிய எதிர்காலத்தை உருவாக்குகிறது”
2014ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் 50,000 நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதேநேரத்தில், முந்தைய ஆட்சியால் 10 ஆண்டுகளில் 50,000 கழிப்பறைகளைக் கூட கட்ட முடியவில்லை என அவர் விமர்சித்தார்.
தற்போது ‘சிப்’ முதல் கப்பல்கள் வரை பல்வேறு துறைகளில் இந்தியா உற்பத்தித் துறைக்கான புதிய எதிர்காலத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.
இலவச இணையவழிப் பயிற்சி
ரயில்வே பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் மற்றும் கூட்டணி ஆட்சிக் காலத்தில் சரக்கு ரயில் பாதை திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதாகவும், தற்போது சரக்கு ரயில் பாதைகள், சாலைகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு மாணவர்கள் செலவிடும் தொகையை குறைக்கும் வகையில், அவர்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
“ஏஐ திறன் கொண்ட இளைஞர்கள் தேவை”
இந்திய இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார்.
ஏஐ திறன் கொண்டவர்களுக்கான தேவை தகவல் தொழில்நுட்பத் துறையுடன் மட்டும் நின்றுவிடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயத்துறையில் புதிய தீர்வுகளை உருவாக்கவும், சுகாதாரத்துறைக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், உற்பத்தித் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என பிரதமர் விளக்கினார்.
ரோபோட்டிக்ஸ் முதல் ஸ்டார்ட்அப் வரை
ஏஐ மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி ரோபோட்டிக்ஸ் துறையில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இளைஞர்கள் தொடங்க முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
உள்நாட்டிலும் உலக அளவிலும் பல்வேறு துறைகளில் உருவாகும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஏஐ தொழில்நுட்பத்தை புரிந்துகொண்டு பயன்படுத்தக்கூடிய இளைஞர்கள் இந்தியாவுக்கு தேவை என்றும் அவர் கூறினார்.
“சரக்கு ரயில் வழித்தடங்கள் இந்தியாவின் உயிர்நாடி”
இந்திய அரசு தொடங்கியுள்ள பல்வேறு முன்னெடுப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாக பிரதமர் தெரிவித்தார்.
பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடங்கள் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் “உயிர்நாடியாக” திகழ்வதாகவும், நவீன சரக்கு போக்குவரத்து கட்டமைப்பு நாட்டின் மாற்றத்தை மேலும் துரிதப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
