காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவிலில் ஜூலை 12-ஆம் தேதி தங்க தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், தேரில் பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு மற்றும் அதன் மதிப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாதது பக்தர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட இந்த பிரமாண்ட தங்க தேர், சுமார் 2 டன் தாமிரத் தகடுகளால் வடிவமைக்கப்பட்டு, அதன் மீது தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி தேரின் வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி தங்க தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு முன்னாள் முதல்வரின் வருகையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அறநிலையத் துறை அதிகாரிகள் அதை மறுத்து, தேரில் பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் அளவு மற்றும் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்த பிறகே தேரோட்டம் நடத்தப்படும் என்று விளக்கம் அளித்திருந்தனர்.
பல மாதங்கள் கடந்தும் மதிப்பீட்டு பணி முழுமையடையாத நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 12-ஆம் தேதி தங்க தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இணை ஆணையர் குமரதுரை கூறுகையில், தங்கத்தின் மதிப்பீட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அறங்காவலர் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் தேரோட்டம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெகந்நாதன், தங்கத்தின் இறுதி மதிப்பீடு குறித்து அறநிலையத் துறை ஆணையரே முடிவு எடுப்பார் என்றும், அதன்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
இதற்கிடையில், தேரில் பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு மற்றும் அதன் மதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாததால், தேரோட்டத்திற்குப் பிறகு தங்கத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இருப்பதாக சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதற்கு முன்பு, இதே கோவிலில் உத்சவர் சோமாஸ்கந்தர் சிலையில் தங்கம் தொடர்பான முறைகேடு வழக்கில் பலர் கைது செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
