மெல்போர்ன்: இந்தியாவின் தூய்மை எரிசக்தி இலக்கை முன்னேற்றும் வகையில், அணுமின் உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தை நீண்டகால அடிப்படையில் வழங்க ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான முக்கிய அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான அரசுமுறை சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, மெல்போர்னில் நடைபெற்ற இந்தியா–ஆஸ்திரேலியா மூன்றாவது உச்சி மாநாட்டில் பங்கேற்று, பிரதமர் அந்தோணி அல்பனீஸுடன் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, அணுசக்தி துறையில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், இந்தியாவுக்கு அமைதியான பயன்பாட்டிற்காக யுரேனியத்தை நீண்டகால அடிப்படையில் வழங்க ஆஸ்திரேலியா சம்மதம் தெரிவித்துள்ளது.
கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “இந்த ஒப்பந்தம் இந்தியாவின் தூய்மை எரிசக்தி திட்டங்களுக்கு புதிய வேகத்தை அளிக்கும். ஜனநாயகம், பன்முக கலாசாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒரே நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் இரு நாடுகளின் நட்புறவு மேலும் வலுப்பெறும்” என்றார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கூறுகையில், “2015-ஆம் ஆண்டு கையெழுத்தான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமைதியான பயன்பாட்டுக்காக இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
அணுசக்தி ஒப்பந்தத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, அரிய கனிமங்களின் விநியோகத் தொடர் மற்றும் முக்கிய மூலோபாய துறைகளில் இரு நாடுகளும் புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளன.
