சென்னை: தமிழக பள்ளிக் கல்வி தொடர்பான 2025–26 கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை (யூடிஸ்) அறிக்கையில், மாணவர் சேர்க்கை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிக்கையின்படி, தமிழகத்தில் மொத்தம் 60 பள்ளிகளில் மாணவர்களே இல்லாத நிலை காணப்படுகிறது. அவற்றில் 40 பள்ளிகளில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் 3,957 பள்ளிகள் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 82,718 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள 57,566 பள்ளிகளில் வெறும் 3,496 பள்ளிகளில் மட்டுமே சூரிய ஒளி மின்சார வசதி அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாநிலத்தில் உள்ள 37,539 அரசுப் பள்ளிகளில் 27,634 பள்ளிகளில் மட்டுமே சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான கழிப்பறை வசதிகள் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த அறிக்கை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது
