சென்னை: கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்காமல் ரூ.3.23 கோடி முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ. எ.வ. வேலு, வரும் ஜூலை 15 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கரூரில் சாலை அமைக்கும் பணிகளில் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், எ.வ. வேலு, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 25ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ. வேலுவின் இல்லம் உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விளக்கம் அளிக்க ஜூலை 3ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவதால் ஆஜராக இயலாது என்று எ.வ. வேலு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில், தன் மீதான வழக்கையும், லுக் அவுட் நோட்டீஸையும் ரத்து செய்யக் கோரி எ.வ. வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூலை 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கட்டாயம் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு ஜூலை 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
