தென்காசி: தவெகவும் திமுகவும் அகில இந்திய அளவில் ஒரே அணியில் இணைய வேண்டும் என்றதாக வெளியான விசிக தலைவர் திருமாவளவனின் கருத்து குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது முந்தைய கருத்தை வாபஸ் பெறுவதாகவும், அதனால் திருமாவளவனின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து இடம்பெறும் என்றும் தெரிவித்தார். திருமாவளவன் கூறியதாக வெளியான கருத்து தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், அதனால்தான் “வட துருவமும் தென் துருவமும் ஒன்று சேர முடியுமா?” என்று விமர்சனமாக பேசியதாகவும் விளக்கமளித்தார்.
மேலும், திமுக கூட்டணியில் இருந்து கொண்டு வேறு அரசியல் அணியுடனும் இணைந்து அமைச்சரவையில் இடம்பெறுவது சாத்தியமா என்ற கேள்வியின் அடிப்படையில்தான் தனது கருத்தை தெரிவித்ததாக அவர் கூறினார்.
திருமாவளவனை புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், அவர் அரசியலில் முன்னேற பல ஆண்டுகளாக தன்னால் இயன்ற ஆதரவை வழங்கியுள்ளதாகவும் வைகோ குறிப்பிட்டார். கடந்த 15 ஆண்டுகளாக அவருக்கு துணையாக இருந்ததாகவும், எதிர்காலத்திலும் அந்த உறவு தொடரும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, தனது கருத்தால் திருமாவளவனின் மனம் புண்பட்டிருந்தால் அந்த வார்த்தைகளை திரும்பப் பெறுவதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் வைகோ கூறினார்.
