டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் தொழில்மன்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது, இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 20-வது ஆண்டை கொண்டாடுவதாக குறிப்பிட்ட அவர், 2006-ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டபோது 4 நாடுகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 21 நாடுகளைக் கொண்ட குடும்பமாக விரிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகள் உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்தையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 25 சதவீதத்தையும் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
“பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார பங்கு அதிகம்”
கடந்த 5 ஆண்டுகளில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு 40 சதவீதமாக இருந்ததாக மோடி தெரிவித்தார்.
அதே காலகட்டத்தில் ஜி7 நாடுகளின் பங்கு 29 சதவீதமாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு பாதியளவு இருப்பதாகவும், ஜி7 நாடுகளின் பங்கு 18 சதவீதம் மட்டுமே என்றும் கூறினார்.
உலக மக்கள் தொகையில் பெரும் பகுதி பிரிக்ஸ் நாடுகளில் இருப்பதால், இந்த நாடுகளிடம் துடிப்பான மற்றும் பெரிய உள்நாட்டு சந்தைகள் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
உலக அளவில் வர்த்தக தடைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா பொருளாதார பாலங்களை உருவாக்கி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
“2014-ம் ஆண்டு முதல் 40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா செய்துள்ளது” என அவர் தெரிவித்தார்.
வர்த்தக தடைகளை குறைப்பதிலும், தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
பல்வேறு துறைகளில் புதிய ஒத்துழைப்பு
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் விவசாயம், சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் ஸ்மார்ட் கிரிட்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய ஒத்துழைப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், பிரிக்ஸ் பெண்கள் வணிக கூட்டமைப்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையின் முக்கிய அங்கமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
“பெண் தொழில்முனைவோர் முன்னிலை வகிக்க வேண்டும்”
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை பெண் தொழில்முனைவோர் முன்னின்று வழிநடத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்தியாவில் நடைபெற்ற பெண்கள் வணிக கூட்டமைப்பு கூட்டத்தில் 200 பெண் தொழில்முனைவோர் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
