மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இந்தியா–ஆஸ்திரேலியா தொழில் மற்றும் முதலீட்டு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளின் உறவை கிரிக்கெட் போட்டியுடன் ஒப்பிட்டு பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, கொள்கை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதுமை சார்ந்த சூழல் ஆகியவை ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.
உற்பத்தி, எரிசக்தி, உள்கட்டமைப்பு, நகர்ப்புற மேம்பாடு, விமானப் போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, உணவு பதப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்தியாவில் நீண்டகால முதலீடுகளை ஆஸ்திரேலிய நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், இந்தியா–ஆஸ்திரேலியா உறவின் அடித்தளம் இரு நாடுகளின் மக்களுக்கிடையேயான நட்புறவுதான் என்றும், இந்திய வம்சாவளியினர் ஆஸ்திரேலியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் தொடங்குவது புதிய அத்தியாயமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கிரிக்கெட்டை உவமையாகக் கொண்டு பேசிய பிரதமர் மோடி, “கிரிக்கெட் தான் இந்தியா–ஆஸ்திரேலியா உறவின் பொதுமொழி. நமது இலக்குகள் ஒருநாள் போட்டியைப் போன்றவை. அதன் முடிவுகள் டி20 போட்டிகளைப் போல வேகமாக கிடைக்கின்றன. ஆனால் நமது கூட்டுச் செயல்பாடு டெஸ்ட் போட்டியைப் போல ஆழமானதும் நீண்டகாலமானதுமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
வரும் ஆண்டுகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருப்பதால், விளையாட்டு துறையிலும் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ், “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு” என்று இரு நாடுகளின் ஒத்துழைப்பை குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “ஒன்றும் ஒன்றும் அருகருகே நின்றால் பதினொன்று ஆகிவிடும்” என்று நகைச்சுவையாக கூறியதையடுத்து, அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி ரசித்தனர்.
