பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் கிஷான், பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா, கேலோ இந்தியா மற்றும் சமுத்ர மந்தன் உள்ளிட்ட முக்கிய தேசிய திட்டங்களுக்கு மொத்தம் ரூ.4.41 லட்சம் கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கிஷான் திட்டம்
விவசாயிகளுக்கு நேரடி நிதியுதவி வழங்கும் பிரதமர் கிஷான் சம்மான் நிதி திட்டத்தை 2026-27 முதல் 2030-31 வரை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.3,15,614 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா
நீர்நிலைகள், கால்வாய்கள் மற்றும் குளங்களில் மிதக்கும் சூரிய மின் தகடுகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா திட்டத்திற்காக ரூ.5,070 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது 700 மெகாவாட் திறனில் உள்ள மிதக்கும் சூரிய மின் உற்பத்தியை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 மெகாவாட் வரை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கூடுதல் நிலம் கையகப்படுத்த தேவையில்லாமல் மின்சார உற்பத்தி அதிகரிப்பதுடன், நீர் ஆவியாகும் அளவும் குறைந்து, நீர் சேமிப்பும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா திட்டம்
விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், திறமையான வீரர்களை உருவாக்கவும் கேலோ இந்தியா திட்டத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.29,054 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய விளையாட்டு அமைப்புகளின் செயல்பாடுகள், போட்டி ஏற்பாடுகள் மற்றும் சர்வதேச தரத்திலான போட்டிகளை நடத்த ரூ.7,387 கோடி நிதி வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஏழு மடங்கு அதிக நிதியாகும்.
சமுத்ர மந்தன் திட்டம்
ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறிந்து இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் சமுத்ர மந்தன் திட்டத்திற்காக ரூ.84,084 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
