கோவை மாவட்டம் காளப்பட்டியில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலுக்கு அருகில் சர்ச் கட்டும் பணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள வழக்கு முடிவடையும் வரை தற்போதைய நிலையை தொடர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காளப்பட்டியில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலுக்கு அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு சர்ச் கட்டுமானம் தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
பின்னர் தேவாலய நிர்வாகம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், கீழமை நீதிமன்ற வழக்கு முடிந்த பிறகு புதிய அனுமதிக்காக விண்ணப்பிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதால், அதற்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கோவை மத உணர்வு அதிகம் கொண்ட பகுதி என்பதையும், கோவில் அருகே பெரிய அளவில் சர்ச் கட்டுவது குறித்து எழுந்துள்ள எதிர்ப்பை சாதாரணமாக புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும், அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்பதும் பதிவுகளில் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
நிலுவையில் உள்ள வழக்கு முடிவடையும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும், அதுவரை சர்ச் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
