தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியது. இதில் சமூக நீதி, கல்வி, நீர்வள மேலாண்மை, நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு மேற்கொள்ளவுள்ள முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
கவர்னர் உரையில், மத்திய அரசு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நிறைவு செய்த பின்னர், தமிழகத்தில் சமூக நீதிக்கான தனி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் கூறப்பட்டது.
தமிழகத்தின் நீண்டகால இருமொழி கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும், சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக்கவும், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத காரணத்தால் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,458 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது ஏற்க முடியாதது என்றும், அந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்தை சட்டரீதியாக எதிர்க்கவும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியை தடுக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது.
கனிம வளத் துறையில் ஊழலை கட்டுப்படுத்தி, சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் மற்றும் வரி ஏய்ப்பை ஒடுக்குவதன் மூலம் அரசின் வருவாயை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு டெண்டர்கள் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழித்து, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
