ஈவியன்: ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகள் கடல்வழிப் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மாலுமிகள் அச்சமின்றி தங்கள் பணியை மேற்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஓமன் அருகே நடைபெற்ற தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த கருத்தை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், உலகளாவிய மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பே சிறந்த வழி என இந்தியா உறுதியாக நம்புவதாக கூறினார்.
“இந்தியா உலகத்தை ஒரே குடும்பமாகக் கருதுகிறது. நாடுகள் கொடையாளர்-பெறுநர் என்ற மனப்பான்மையைத் தாண்டி, சமமான பங்காளிகளாக இணைந்து செயல்பட வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் அருகில் நிற்பதை விட, ஒன்றாக முன்னேற வேண்டும். உலக நாடுகளுக்கிடையேயான உறவுகள் சார்புநிலையுடன் அல்லாமல், பரஸ்பர மரியாதை மற்றும் கண்ணியத்துடன் அமைய வேண்டும்” என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும், பயிற்சி, திறன் மேம்பாடு, நீர்வள மேலாண்மை, விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் உலக நாடுகள் இணைந்து செயல்பட்டால், உலகளாவிய சவால்களுக்கு பயனுள்ள தீர்வுகளை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
