இஸ்லாமாபாத்: மின்கட்டண உயர்வு, கோதுமை விலை உயர்வு மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடங்கிய மக்கள் போராட்டம், தற்போது அரசியல் உரிமைகள் மற்றும் தன்னாட்சி கோரிக்கையை வலியுறுத்தும் பெரிய இயக்கமாக மாறியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார சுமைகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு கோதுமை மானியம் மற்றும் மின் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட சில சலுகைகளை அறிவித்தது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை என்றும், தங்களுக்கு அரசியல் சுதந்திரம் மற்றும் இயற்கை வளங்களின் மீதான உரிமையே முக்கியம் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
‘கூட்டு அவாமி அதிரடி குழு’ என்ற அமைப்பின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் களமிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராவலகோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அமைப்பின் தலைவர் சர்தார் அமன், பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு உணவுப் பொருட்கள் மற்றும் ரேஷன் விநியோகத்தை தடுத்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், அப்பகுதியின் நீர்வளம் மற்றும் இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “இந்தியாவிடமிருந்து எங்களை பாதுகாக்கிறோம் என்று கூறி பாகிஸ்தான் ராணுவம் இங்கு இருப்பதற்கு அவசியமில்லை. எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம். பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
