ஈவியான்: உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் இந்தியாவின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், உலகை ஜி-7 நாடுகள் மட்டுமே வழிநடத்தும் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
பிரான்சின் ஈவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி-7 அமைப்பின் 52-வது உச்சி மாநாட்டில் இந்தியா, பிரேசில், எகிப்து, கென்யா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரியில் உரையாற்றும்போது, தற்போதைய உலகச் சூழலில் ஜி-7 நாடுகள் மட்டுமே உலகை வழிநடத்த முடியும் என்ற எண்ணம் மாறிவிட்டதாக தெரிவித்தார்.
மேலும், உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண பரந்த சர்வதேச ஒத்துழைப்பும், புதிய அணுகுமுறைகளும் அவசியம் என்பதை ஜி-7 நாடுகள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் பிரதிபலிப்பாகவே இந்தியாவின் பங்கேற்பு அமைந்துள்ளதாகவும், உலக விவகாரங்களில் இந்தியாவின் செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் மார்க் கார்னி பாராட்டினார்.
