வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
அமைதி ஒப்பந்தத்தின் முதல் நிபந்தனையாக, ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது. இரண்டாவது, உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதையான ஹார்முஸ் ஜலசந்தி எப்போதும் திறந்த நிலையில் இருக்க வேண்டும். மூன்றாவது, ஈரான் சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றி, பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கும் ஆதரவு மற்றும் நிதியுதவியை நிறுத்தினால், அந்நாட்டுக்கு பொருளாதார சலுகைகள் மற்றும் பிற நன்மைகள் வழங்கப்படும்.
மேலும், அணுசக்தித் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கும் முயற்சிகளையும் ஈரான் கைவிட வேண்டும் என வான்ஸ் வலியுறுத்தினார்.
இந்த நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொண்டால், பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இல்லையெனில் எந்தவித சலுகைகளும் வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிலைப்பாட்டை குறிப்பிட்ட வான்ஸ், “ஈரான் எந்த முடிவை எடுத்தாலும் அமெரிக்கா தனது இலக்கை அடையும். ஈரான் தனது கொள்கைகளை மாற்றினால் அது ஒரு வெற்றி; மாற்றாவிட்டால், அதன் அணுசக்தித் திட்டத்தை முறியடித்து ஹார்முஸ் ஜலசந்தியை திறந்த நிலையில் வைத்திருப்போம். முடிவு முழுவதும் ஈரானின் கையில்தான் உள்ளது” என்று கூறினார்.
