மும்பை: மஹாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரவிருக்கும் நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடருக்கு முன்பாக, உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த 7 மக்களவை உறுப்பினர்கள் ஷிண்டே அணியில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதுகுறித்து சிவசேனா தலைவரும், எம்எல்ஏவுமான கிருபாலு மானே கூறுகையில், “உத்தவ் தாக்கரே அணியின் 7 எம்பிக்கள் பருவகால கூட்டத்தொடருக்கு முன்பாகவே ஷிண்டே அணியில் சேர்க்கப்படுவார்கள். மஹாராஷ்டிரா அரசியலில் விரைவில் ‘ஆபரேஷன் டைகர்’ அரங்கேறும்” என்று தெரிவித்தார்.
மேலும், எம்பிக்களைத் தொடர்ந்து எம்எல்ஏக்களையும் ஷிண்டே அணியில் இணைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், தற்போது 16 எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த தகவல்கள் தொடர்பாக உத்தவ் தாக்கரே அணியிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த தகவல்கள் மஹாராஷ்டிரா அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
