சென்னை: துணை முதல்வர் உதயநிதி, தன்னிடம் மொத்தம் 33.92 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் அவர், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்து தனது சொத்து விவரங்களை வெளியிட்டார்.
அதில், தன்னிடம் 50,000 ரூபாய் ரொக்கம் மற்றும் மனைவி கிருத்திகாவிடம் 75,000 ரூபாய் ரொக்கம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மகள் தன்மயாவின் வங்கி நிரந்தர வைப்பு கணக்கில் 2 லட்சத்து 56,940 ரூபாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதியிடம் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள டிபென்டர் கார் மற்றும் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா கார் உள்ளது. அவரிடம் நகைகள் எதுவும் இல்லை.
அவரது மனைவி கிருத்திகாவிடம் 1,600 கிராம் தங்க நகைகள் உள்ளன.
மொத்தமாக, உதயநிதியிடம் 12.92 கோடி ரூபாய், அவரது மனைவியிடம் 13.25 கோடி ரூபாய் மற்றும் மகளிடம் 2.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன. இவற்றின் மொத்தம் 26.20 கோடி ரூபாயாகும்.
மேலும், உதயநிதி பெயரில் 7.72 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. இதனை சேர்த்து, அவரது மொத்த சொத்து மதிப்பு 33.92 கோடி ரூபாயாக உள்ளது.
அவருக்கு எதிராக 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றுள்ளதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
