திருச்சி: “காங்கிரசில் உள்ள சிலரை பணப்பையில் போட்டுக் கொண்டு, சிறுபான்மை மக்களை ஏமாற்ற தி.மு.க பாதி கதர் கூட்டணியை அமைத்துள்ளது” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விமர்சித்தார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அவர், சென்னை பெரம்பூர் தொகுதியை தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியிலும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், சமையல் எரிவாயு பிரச்னை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். மத்திய அரசு மற்றும் மாநில அரசு முன்னெச்சரிக்கை எடுத்திருந்தால் தட்டுப்பாட்டை குறைத்திருக்க முடிந்திருக்கும் என்றும், இந்த விவகாரத்தில் ஸ்டாலின் பொறுப்பை தவிர்க்கிறார் என்றும் விமர்சித்தார்.
மேலும், “ரெய்டு என்றால் டில்லி செல்லும் ஸ்டாலின், காஸ் பிரச்னைக்காக டில்லி செல்லவில்லை. சிலிண்டர் மானியம், கரும்பு ஆதார விலை, நீட் ரத்து போன்ற வாக்குறுதிகள் நிறைவேறவில்லை” என குற்றம்சாட்டினார்.
இதற்கு மாறாக, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆறு சிலிண்டர்கள் இலவசம், பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம், பட்டுப்புடவை, 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் உரிமைத் தொகை, அனைத்து பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
திருச்சியில் உள்ள ஒரு அமைச்சர் வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாகவும், தகுதியானவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“நாங்கள் 100 சதவீதம் நியாயமான ஆட்சியை வழங்குவோம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும், தி.மு.க மற்றும் பிற கூட்டணிகள் இணைந்து தன்னை எதிர்க்கின்றன என்றும், கரூரில் நடந்த சம்பவம் சூழ்ச்சி என்றும் கூறினார். தனது ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு தாமதப்படுத்தப்படுவதும் திட்டமிட்டதாக அவர் தெரிவித்தார்.
“நமக்குள் உள்ள பந்தம் தேர்தலில் ஆயுதமாக மாறும் என்பதால், அதை தடுக்க கூட்டு சூழ்ச்சி நடக்கிறது” எனவும் கூறினார்.
அதோடு, “தி.மு.க மற்றும் பா.ஜ இரண்டையும் நம்ப வேண்டாம்; இரண்டும் ஒரே கூட்டணி. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்; இது ‘விசில் புரட்சி’ தேர்தலாக இருக்க வேண்டும்” என விஜய் பேசியார்.
