மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியிலும் இந்திய பொருளாதார வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், சூரிய ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகத் தெரிவித்தார்.
இந்த உச்சிமாநாடு தனித்துவமான சூழலில் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனா பெருந்தொற்று முதல் மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி வரை உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார்.
மேற்கு ஆசிய மோதல் தொடர்ந்து வரும் நிலையிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 140 கோடி இந்தியர்களும் இந்த நெருக்கடிகளைத் திறம்படக் கையாண்டுள்ளதில் பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு சூரிய ஆற்றலில் இயங்கும் நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் பம்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு விவசாயியும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பசுமை ஹைட்ரஜன் துறையில் இந்தியா பெரிய முன்னேற்றத்தை அடையத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆண்டுக்கு 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பசுமை ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
