18 வயதிலேயே ரூ.12.32 கோடி நிதி திரட்டிய இந்திய இளைஞர்கள்!
இந்தியாவைச் சேர்ந்த நமன் பன்சால் மற்றும் ஸ்ரேயன்ஸ் ஜெயின் ஆகிய இரு இளைஞர்களும், தங்களது ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘மேனிக்யூல்’ (Manicule) நிறுவனத்திற்காக ரூ.12.32 கோடி நிதி திரட்டி அசத்தியுள்ளனர். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் நமன் பன்சால். தனது 13 வயதிலேயே முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பணியாற்றத் தொடங்கினார். டெவலப்பர், தொழில்நுட்ப உள்ளடக்கம் மற்றும் மென்பொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளில் அனுபவம் பெற்றுள்ளார். மேலும், ஐந்து ஆண்டுகளாக தொழில்நுட்ப விற்பனைப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.
மற்றொரு இணை நிறுவனரான ஸ்ரேயன்ஸ் ஜெயின், தனது 14 வயதிலேயே புரோகிராமிங் எழுதத் தொடங்கினார். பல்கலைக்கழகக் கல்வியைத் தொடராமல் தொழில்நுட்பத் துறையில் தனது பணியைத் தொடங்கினார். சூப்பர்மெம்மரி நிறுவனத்தில் பணியாற்றியபோது, நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையிலான செயலி ஒன்றையும் உருவாக்கினார்.
தொழில்நுட்பத் துறையில் அனுபவம் பெற்ற இருவரும் இணைந்து ‘மேனிக்யூல்’ என்ற ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினர். இருவரும் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
ஏஐ தளங்கள் வாயிலாக நுகர்வோரை மென்பொருள் நிறுவனங்கள் அணுகும் முறையை மாற்றுவது, அவர்களுக்குப் பொருத்தமான தயாரிப்புகளைப் பரிந்துரைப்பது மற்றும் அந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பது ஆகியவை தங்களது நிறுவனத்தின் நோக்கம் என மேனிக்யூல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நிதி திரட்டும் முயற்சியில் நமன் பன்சாலும் ஸ்ரேயன்ஸ் ஜெயினும் ஈடுபட்டனர். இதன் மூலம் முதல்கட்டமாக ரூ.12.32 கோடி நிதியைத் திரட்டியுள்ளனர். இளம் வயதிலேயே ஏஐ தொழில்நுட்பத் துறையில் நிறுவனம் தொடங்கி நிதி திரட்டியுள்ள இவர்களின் முயற்சி கவனம் பெற்றுள்ளது.
