சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தால் தி.மு.க. வெற்றி பாதிக்கப்படாது. இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது, நடிகர் விஜயின் அவநம்பிக்கையை காட்டுகிறது” என முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தெரிவித்தார்.
வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் கார்த்திக் மோகன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் மண்டபத்தில், குடியிருப்போர் நல சங்க தலைவர்களிடம் ஆதரவு கோரும் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, முதல்வர் ஸ்டாலினின் மருமகனும், வேட்பாளர் கார்த்திக் மோகனின் நண்பருமான சபரீசன், தனது மனைவி செந்தாமரையுடன் திடீரென கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் பேசிய அவர், “வில்லிவாக்கத்தில் போட்டியிடும் கார்த்திக் என் நண்பர். அவரை நான் தான் போட்டியிடுகிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அவரை வெற்றி பெறச் செய்தால், உங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்து பணிகளையும் அவர் செய்து கொடுப்பார்; அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபரீசன், தமிழகத்தில் தி.மு.க ஆட்சி தொடரும் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்றும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லை என்றும், புதியதாக அரசியலுக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தி.மு.கக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.
அதோடு, “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது, அவரது அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது” எனவும் விமர்சித்தார்.
