புதுடில்லி: இந்தியாவுக்காக வர வேண்டிய எட்டு எரிவாயு டேங்கர் கப்பல்கள் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி அருகே காத்திருக்கும் நிலையில், அவற்றை பாதுகாப்பாக அனுப்புவது குறித்து இந்தியா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேற்கு ஆசிய நாடான ஈரானின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி உள்ளது. இந்த கடல் பாதை வழியாக உலகின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது.
தற்போது அந்த பகுதியில் நடைபெறும் தாக்குதல்களால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவில் சுமார் 60 முதல் 67 சதவீதம் வரை இறக்குமதியை நம்பியுள்ளது.
இதில் பெரும்பகுதி சவுதி அரேபியா மற்றும் கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.
அதனால் இந்த வழித்தடத்தில் ஏற்படும் தடைகள் இந்தியாவின் எரிவாயு வினியோகத்தை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே காத்திருக்கும் இந்தியாவுக்கான எட்டு எரிவாயு டேங்கர் கப்பல்களை அனுப்புவது குறித்து இந்தியா மற்றும் ஈரான் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் நேற்று நான்காவது முறையாக தொலைபேசியில் பேச்சு நடத்தினார்.
அப்போது இந்தியாவுக்கான சமையல் எரிவாயு கப்பல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த கப்பல்கள் விரைவில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி பயணம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி கூறியதாவது:
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு இத்தகைய நெருக்கடி காலங்களில் பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
