சென்னை: வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா, தி.மு.க. கூட்டணியில் விருகம்பாக்கம் அல்லது விருத்தாசலம் ஆகிய தொகுதிகளில் எதில் போட்டியிடுவது என்ற விவகாரத்தில் குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்த்து வருகிறது.
அதில் குறிப்பாக சென்னை விருகம்பாக்கம் தொகுதியை அந்த கட்சி கோரியுள்ளது.
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வீடு இந்த தொகுதியில் உள்ள சாலிகிராமத்தில் அமைந்துள்ளது.
மேலும் விஜயகாந்தின் உதவியை பெற்ற திரைப்பட தொழிலாளர்கள் பலர் இந்த பகுதியில் வசிப்பதால் அவர்களின் ஆதரவு தே.மு.தி.க.க்கு கிடைக்கும் என அந்த கட்சி நம்புகிறது.
இந்த தொகுதியில் முன்பு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட பார்த்தசாரதி வெற்றி பெற்றிருந்தார்.
அதனால் மீண்டும் அந்த தொகுதியை வழங்க வேண்டும் என தே.மு.தி.க. கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் அந்த தொகுதியில் பார்த்தசாரதி மீண்டும் போட்டியிட்டால் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்க உள்ள வி.என். ரவியை எதிர்த்து வெற்றி பெறுவது சிரமமாக இருக்கலாம் என தி.மு.க. தரப்பு கருதுகிறது.
இதனால் பிரேமலதா அல்லது அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என தி.மு.க. தலைமை கருதுகிறது.
அதனால் அவர்களில் ஒருவர் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என தி.மு.க. தலைமை விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
