சென்னையில் நடைபெற்ற சிறப்பு விழாவில், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து கலந்து கொண்ட முதல்வர் விஜய், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், போதைப்பொருள் ஒழிப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். மொத்தம் 665 காவல் அதிகாரிகள் இந்த விழாவில் பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை பெற்றனர்.
ஜனாதிபதி பதக்கங்களை டிஜிபி வன்னியபெருமாள், பாலநாகதேவி ஆகியோர் முதல்வர் விஜயிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். ஐஜி மகேஷ்வரியும் ஜனாதிபதி பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
