காவிரி நீர் விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தின் பல தியேட்டர்களில் முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் திரையிடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரி நீரை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலை காரணமாக வருகையை தவிர்க்குமாறு கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 13-ஆம் தேதி முழு அடைப்புக்கு கன்னட ஆதரவு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள சூழலில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக பல திரையரங்குகள் ‘ஜனநாயகன்’ திரைப்பட காட்சிகளை ரத்து செய்துள்ளன.
பெங்களூருவில் உள்ள ஊர்வசி திரையரங்கில், காவல்துறையின் அறிவுரையைத் தொடர்ந்து திரைப்படத்தின் திரையிடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், படத்தின் போஸ்டர்கள் மற்றும் கட் அவுட்டுகள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக கன்னட திரைப்படமான ‘காரவல்லி’ திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. தியேட்டர் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடாக காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மாண்டியாவில் உள்ள ஒரு திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’ பேனர்களை கன்னட ஆதரவு அமைப்பினர் அகற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நிலைமையை ஆய்வு செய்ய கர்நாடக பிலிம் சேம்பர் நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்
