கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தேவி குமாரி மகளிர் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
மாணவர் சேர்க்கைக்காக கல்லூரிக்கு வரும் மாணவிகளை, சில பிற மதத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளில் சேருமாறு வற்புறுத்துவதாக பா.ஜ. குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக குழித்துறை நகர பா.ஜ. தலைவர் சுமன் தலைமையிலான நிர்வாகிகள், கல்லூரி தாளாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ஒருகாலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் கல்வி பயின்ற இந்த கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும், சேர்க்கைக்காக வரும் மாணவிகளிடம் சில பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளை தேர்வு செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் இருந்த ஒரு பள்ளி ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், அதேபோன்ற சூழலை இந்த கல்லூரிக்கும் உருவாக்க முயற்சி நடைபெறுவதாக பா.ஜ. தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பா.ஜ. நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
