கர்நாடகாவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி நவ நீதம்மா, திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக அலிபிரி நடைபாதையில் உள்ள 3,550 படிகளையும் ஏறி சென்றது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நவ நீதம்மா தனது குடும்பத்தினருடன் திருப்பதி வந்திருந்தார். சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள அலிபிரி நடைபாதையில் அமைந்துள்ள 3,550 படிக்கட்டுகளையும் அவர் நடந்து கடந்து திருமலை சென்றார். அவரது பக்தி மற்றும் மன உறுதியை வெளிப்படுத்தும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பாராட்டுகளைப் பெற்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பதி தேவஸ்தானம், மூதாட்டிக்கு சிறப்பு திவ்ய தரிசன ஏற்பாடுகளை செய்து, ஏழுமலையானை தரிசிக்க வசதி செய்தது.
இந்த சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைதளப் பதிவில், “உண்மையான பக்திக்கு வயது ஒரு தடையல்ல. கர்நாடகாவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி நடந்தே திருமலைக்கு சென்று வெங்கடேஸ்வர சுவாமியை தரிசித்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது” என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
116 வயதிலும் அசைக்க முடியாத பக்தி உணர்வுடன் திருமலை மலைப்படிகளை ஏறிச் சென்ற நவ நீதம்மாவின் செயல், பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.
