மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் பிற சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவர்களின் பெயர், முகவரி மற்றும் ஆக்கிரமிப்பின் தன்மை குறித்த முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகோவில்களின் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் கோவில் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கோவிலுக்கு சொந்தமாக 1,233.98 ஏக்கர் நிலம், 133 பிளாட்கள், 108 கடைகள் மற்றும் மதுரை எழுகடல் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், செல்லூரில் உள்ள 8.37 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி வருபவர்கள் வாடகைதாரர்களாக தொடர சம்மதித்துள்ளதாகவும், மற்ற ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு, தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தின் புனரமைப்புப் பணிகள் எப்போது நிறைவடையும், பிரசாதம் தயாரிக்கும் சமையலறை எப்போது நவீன வசதிகளுடன் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
அத்துடன், கோவில் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவர்களின் பெயர், முகவரி மற்றும் அவர்கள் எந்த நோக்கத்திற்காக அந்த சொத்துகளை பயன்படுத்தி வருகின்றனர் என்ற விவரங்களையும் ஜூலை 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
