சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. தனது முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 297 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டார். ஏற்கனவே மூன்று கட்டங்களாக வெளியிடப்பட்ட வாக்குறுதிகளுடன் புதிய அறிவிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையில், குடும்பத்துக்கு ரூ.10,000 உதவித்தொகை, அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,000, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், தரமான வீடு வழங்குதல், 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ரூ.25,000 மானியம், கல்விக்கடன் தள்ளுபடி, மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இல்லத்தரசிகளின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச பிரிஜ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், விவசாயம், நீர்வளம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட 31 பிரிவுகளில் இந்த 297 வாக்குறுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பேட்டியில் பேசிய பழனிசாமி, திமுக அரசு தனது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா காலத்திலும் மக்களை பாதிக்காமல் நிர்வாகம் செய்ததாகவும், எதிர்காலத்திலும் நிதி ஆதாரங்களை அதிகரித்து அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீடு திட்டத்தை 10% ஆக உயர்த்தும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பது, மக்கள் தேவைகளை பூர்த்தி செய்து நல்ல வாழ்க்கை வழங்குவது அரசின் கடமை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
