புதுடில்லி: மேற்காசியாவில் தீவிரமடைந்து வரும் மோதலின் பின்னணியில், இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலைகளில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், முப்படைகளின் தளபதிகள், ராணுவ செயலர் மற்றும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது, உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அதிகாரிகள் விரிவான விளக்கங்களை அளித்தனர். மேற்காசிய மோதல் மேலும் தீவிரமடைந்தால், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், இந்த மோதல் காரணமாக ராணுவ வினியோகத் தொடர், ஆயுத கொள்முதல், உற்பத்தி மற்றும் தளவாட பராமரிப்பில் ஏற்படக்கூடிய சவால்கள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “நாட்டின் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்த, தற்போதைய மோதல்களிலிருந்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அனுபவங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த தொலைநோக்கு திட்டத்தை உருவாக்கி, ‘சுயசார்பு இந்தியா’ இலக்கை உறுதியாக முன்னெடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
