சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ள அரசியல் முடிவை “தியாகம்” என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் இருப்பதாகவும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இருவரும் அரசியல் தலைவர்களாக மட்டுமன்றி நண்பர்களாகவும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். “இது தியாகம் அல்ல, கடமை” என கமல் கூறினாலும், அவர் செய்திருப்பது உண்மையில் தியாகம்தான் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், கமலின் இந்த முடிவு தனக்கு மிகுந்த நெகிழ்ச்சியை அளித்ததாகவும், அவருக்கும் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், உருவாக உள்ள திராவிட மாடல் 2.0 அரசில் அவரது பங்களிப்பு முக்கியமானது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தன்னலத்தை ஒதுக்கி, தமிழக நலனை முன்னிறுத்திய இந்த பெருந்தன்மையான முடிவை வரலாறு நினைவுகூரும் என்றும் அவர் தெரிவித்தார்.
