மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவிலில் திருப்பணி பணிகள் தொடங்காமல் இருப்பது ஹிந்து மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவிலில் திருப்பணி மேற்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் கோவில் கட்டுமான பணிகளுக்கு அப்பகுதியிலுள்ள சில முஸ்லிம் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமீபத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கோவிலை இடிக்காமல் அப்படியே வைத்துக் கொண்டு திருப்பணி செய்ய வேண்டும் என்று அப்பகுதி முஸ்லிம்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த கோரிக்கையை ஏற்று அறநிலையத்துறை திருப்பணி பணிகளை தொடங்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஹிந்து சமூகத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது:
விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவிலுக்கு 2.20 ஏக்கர் நிலம் உள்ளது.
கோவில் அருகில் மசூதியின் ஒரு பக்க வாசல் அமைந்துள்ளது.
மசூதிக்கு செல்லும் வழியில் இந்த இரண்டு கோவில்களும் இருப்பதால் தங்களின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இஸ்லாம் மதம் மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களை மதிக்க வேண்டும் என்று கூறினாலும், ஹிந்து கோவில் திருப்பணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஹிந்துக்கள் யாரும் முஸ்லிம் வழிபாட்டிலும் வக்ஃப் வாரிய விவகாரங்களிலும் தலையிடுவதில்லை.
ஆனால் சிலர் அறநிலையத்துறை விவகாரங்களில் தலையிட்டு கோவில் பணிகளை தடுக்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதிமன்ற உத்தரவின்படி தும்மநாயக்கன்பட்டி விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவிலில் திருப்பணி பணிகளை தமிழக அரசு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
