சென்னை மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,800 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் தரத்தை மறுஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்துள்ள புகார்களை அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இதையடுத்து, முதல்வர் விஜய் உத்தரவின்பேரில், அவசரமாக டெண்டர் வழங்கப்பட்ட பணிகள் மற்றும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பணிகளின் தரம் மீண்டும் பரிசோதிக்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் தரமான பணிகளை மேற்கொண்டுள்ளனரா என்பதை உறுதி செய்த பிறகே நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் தரமற்ற பணிகள் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படாது. மேலும், அவர்கள் எதிர்காலத்தில் மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளில் பங்கேற்க முடியாத வகையில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு நிறைவடையும் வரை புதிய திட்டங்களுக்கு டெண்டர் கோருவதற்கும், அவசரகதியில் வழங்கப்பட்ட சில பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. திட்ட மதிப்பீடுகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், புதிய மதிப்பீடு தயாரித்து மீண்டும் டெண்டர் கோரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
