சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 62-வது கூட்டத்தொடரில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. மேலும், பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது.
கூட்டத்தில் உரையாற்றிய இந்திய தூதர் அனுபமா சிங், சர்வதேச அரங்குகளில் இருதரப்பு பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்பும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவும், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடு அந்த ஒப்பந்தத்தின் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய சூழ்நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதியானது என்பது மறுக்க முடியாத உண்மை என்றும், பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் செயல்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
1960-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான நதிநீர் பகிர்வு தொடர்பான முக்கிய ஒப்பந்தமாகும். சமீபத்தில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
