வாஷிங்டன்: மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாடுகளை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானும் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் பாதுகாப்பு காரணங்களால் பல நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அதன்படி பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவசர உதவி தேவைப்படும் அமெரிக்கர்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்களையும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக ஈரானுக்கு கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் எதிர்காலத்தில் ஈரானிடம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தாக்குதல் ட்ரோன்கள் இருக்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
