மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அமைச்சர் ரகுபதி வெளியிட்ட கருத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவின் போது, ஜனவரி 7ம் தேதி வெளியான செய்தியில் அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்துகள் குறித்து நீதிமன்றம் கவனம் எடுத்தது.
அந்த கருத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடுக்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், புதிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க முடியாது என்றும் அமைச்சர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், நாளிதழ் செய்திகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார். அதற்கு நீதிபதி, அமைச்சர் அத்தகைய கருத்தை தெரிவித்தாரா என்பது உறுதி செய்யப்பட வேண்டிய விஷயம் எனக் குறிப்பிட்டார்.
நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னரும், வேறு எந்த அதிகாரமும் அதை மறுக்கும் அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி கூறினார்.
ஒரு விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் வந்துவிட்டால், அதில் சம்பந்தப்பட்ட தரப்புகள் தீர்ப்பை மதித்து அதனை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவிக்க விரும்பினால் மேல்முறையீடு செய்வதே சட்டப்படி சரியான வழி என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சட்ட அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு அடிப்படை சட்ட அறிவு இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.
அதே நேரத்தில் தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட கலெக்டர், நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கான நோக்கம் இல்லை என்று விளக்கம் அளித்திருப்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்தது.
இதையடுத்து அமைச்சர் கருத்தை அடிப்படையாக கொண்டு தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு மீதான விசாரணையை நிறுத்தி வைக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. தேவையான சூழலில் இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
