மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் மூவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஓமன் கடற்பரப்பில் சென்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் ஈரானால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த மூவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக வளைகுடா பகுதிகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் துபாயில் சிக்கித் தவித்த தமிழகத்தை சேர்ந்த பலர் நாடு திரும்ப முடியாமல் இருந்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசு ஏற்பாடு செய்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 217 பேர் பாதுகாப்பாக சென்னை திரும்பினர். வளைகுடா நாடுகள் வான்வெளியை மூடியிருந்ததால், சவுதி அரேபியா வழியாக அவர்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டனர்.
சென்னை வந்தவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
துபாயில் நிலைமை மிகவும் பதற்றமாக இருந்ததாகவும், அடிக்கடி வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் அங்கு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அரசு சார்பில் பாதுகாப்பாக ஹோட்டல்களில் தங்கவைத்து பின்னர் இந்தியாவிற்கு அனுப்பியதாக அவர்கள் கூறினர்.
